அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம்: மாதிரி ஆளுமைத்தேர்வு அறிவிப்பு

மத்திய தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் வெற்றிபெற்றவர்களுக்கு, அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் மாதிரி ஆளுமைத்தேர்வினை நடத்துகிறது.

தமிழகத்திலுள்ள இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளைப் பெறவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு உருவான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் மூலமாக  ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதுவரை வெற்றி பெற்று இந்திய அளவில் செம்மையாக பணியாற்றி வருகின்றார்கள்.

இந்த மையம் கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச் சாலையில் தனி வளாகத்தில் இயங்கிக்கொண்டு வருகிறது. தேர்வர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. இருபத்தி ஐந்தாயிரம் நூல்கள் கொண்ட சிறந்த நூலகம் ஒன்றும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது.

 image

25.03.2021 அன்று மத்திய தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் இறுதி முடிவில் இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 19 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், இவர்கள் புது டில்லியில் ஆளுமைத் தேர்வை சந்திக்க உள்ளார்கள். முதன்மைத் தேர்விலும் ஆளுமைத் தேர்விலும் பெறப்போகின்ற மொத்த மதிப்பெண்களை கணக்கிட்டு வெற்றி வரிசை தீர்மானிக்கப்பட உள்ளது.

இம்மையத்தில் பயின்று வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைச் சார்ந்த முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் மாதிரி ஆளுமைத் தேர்வை இம்மையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த மாதிரி ஆளுமைத் தேர்வு அவர்களுக்கு மிகப் பெரிய பயிற்சியாக இருப்பதோடு தங்கள் செயல்பாட்டை இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவையும் தருகிறது. அதனால் பல தேர்வர்கள் இதில் கலந்துகொண்டு அறிவுரைகளைப் பெற்று பயன் அடைந்திருக்கிறார்கள்.

இம்முறையும் மாதிரி ஆளுமைத்தேர்வு முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற அனைத்துத் தேர்வர்களுக்கும் நடத்தப்பட இருக்கிறது. இம்மாதிரி ஆளுமைத்  தேர்வு 08.04.2021, வியாழக்கிழமை அன்றும் 09.04.2021 வெள்ளிக்கிழமை அன்றும் இரு நாட்கள் நடத்தப்பட உள்ளன. காலை 10.00 மணிக்கு இத்தேர்வு தொடங்கிவிடும். முதல் நாள் காலை ஆளுமைத் தேர்வு என்றால் என்ன என்பது பற்றியும் அதில் தேவைப்படுகிற திறன்கள் என்ன என்பன பற்றியும் தேர்வர்களுக்கு எடுத்துக் கூறப்படுவதுடன் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும். பின்னர் அவர்கள் தேர்வில் கலந்துகொள்வார்கள்.

இம்மாதிரித் தேர்வை ஆறு குழுக்கள் நடத்த உள்ளன. ஒவ்வொரு  குழுவிலும் தலைமைச் செயலாளர் நிலையில் பணிபுரிகிறவர்கள், மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றியவர்கள், குடிமைப்பணித் தேர்விற்கு பயிற்சி அளிக்கிற பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்ற திறன் போன்றவற்றைத் துல்லியமாக பரிசீலனை செய்கிற உளவியல் நிபுனர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள். ஆளுமைத் தேர்வில் இவர்களுடைய ஆளுமைத் தோற்றம், முன்னெடுக்கும் பண்பு, தலைமைப் பண்பு, தனித் திறன், தன்னம்பிக்கை, அறிவாற்றல், தகவல் பரிமாற்றம், உடல் மொழி, அறநெறி, ஊக்கத்திறன் போன்ற பத்து பண்புகள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு நூறு சதவிகிதத்திற்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும். பின்னர் தேர்வர்களிடம் அவர்கள் செயல்பட்ட விதம் குறித்து எடுத்துக் கூறி எப்படியெல்லாம் தங்களை இன்னும் செம்மையாக செதுக்கிக்கொளள வேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்படும்.

தேர்வர்கள் மாதிரி ஆளுமைத் தேர்வில் எவ்வாறு விடையளித்தார்கள் என்பதை அவர்களே கண்டால்தான் தங்கள் குறைபாடுகளை நீக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே, அவர்கள் ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ளும்போதே காணொலிக்கருவி மூலம் அவர்கள் செயல்பாட்டை பதிவு செய்து, தேர்வு முடிந்த கையோடு அவர்கள் கையில் குறுந்தகடாக வழங்கப்படும். அந்த குறுந்தகட்டை அவர்கள் பார்த்து பார்த்து தங்கள் தகவல் பரிமாற்றம், உடல்மொழி, மொழியில் சரளத்தன்மை போன்றவற்றை உண்மையான ஆளுமைத் தேர்விற்கு முன்பு விருத்தி செய்துகொள்ள முடியும். மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு வருகிறவர்களுக்கு அண்ணா மேலாண்மை நிலையத்திலேயே மதிய உணவு வழங்கப்படும். அவர்களுடைய செயல்பாடு குறித்த அறிக்கையின் நகலும் வழங்கப்படும். ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஊக்கத்தொகையாக ரூ. 2000/- வழங்கப்படும்.

ஆகவே, முதன்மைத் தேர்வு வெற்றியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை (சுயவிவரக் குறிப்புடன்) பயிற்சி மைய முதல்வருக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ புகைப்படத்துடன் 03.04.2021க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 முகவரி : வெ. இறையன்பு

 கூடுதல் தலைமைச் செயலாளர் /

 இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும்

 பயிற்சி துறைத் தலைவர்.

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/97680/All-India-Civil-Service-Examination-Training-Center--Model-Personnel-Examination-Announcement.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா