நிழல் இல்லா நாள்: தஞ்சையில் கண்டுகளித்த மாணவர்கள்!

தஞ்சாவூரில் செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகக் கூடிய நிழல் இல்லா நாள் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது. இதை மாணவர்கள் கண்டுகளித்தனர்.
தமிழகத்தில் இம்மாதம் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் சில ஊர்களில் நிழல் இல்லா நாள் வருகிறது. அதாவது, குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச் சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது, நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல், அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைதான் 'நிழல் இல்லா நாள்' என்றும், 'பூஜ்ஜிய நிழல் நாள்' எனவும் கூறுகிறோம்.
இதன்படி, ஏப்.-10 ஆம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவிலிலும், 11-ஆம் தேதி திருவனந்தபுரம், திருச்செந்தூரிலும் என தொடர்ந்து ஒவ்வொரு நாளாக சில ஊர்களில் 'நிழல் இல்லா நாள்' நிகழ்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகல் 12.12 மணிக்கு நிழல் இல்லா நாள் நிகழ்ந்தது.

இதையொட்டி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியிலும், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் சி.எஸ். மெட்ரிக் பள்ளியிலும் நிழல் விழாததை மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் வெ.சுகுமாரன் கூறும்போது, "நாள்தோறும் சூரியன் நம் தலைக்கு மேலே வரும். என்றாலும், ஆண்டுக்கு இரு நாள்களில் மட்டுமே சூரியன் மிகச் சரியாக நம் தலைக்கு மேலே வருகிறது.

இந்த இரு நாள்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும். மற்ற நாள்களில் நண்பகலில் கூட வடக்கு திசையிலோ அல்லது தெற்கு திசையிலோ சிறிய நிழல் விழும். இந்த இரண்டு நிழலில்லா நாள்கள் கூட கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் வரும். அதற்கு அப்பால் துருவப் பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது" என்றார் சுகுமாரன்.
- காதர் உசேன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99453/No-shadow-day-in-Tanjore.html
Comments
Post a Comment