பிஎச்.டி-க்கு சாதி தடையா?- பேராசிரியருக்கு எதிரான மாணவி தீபாவின் உண்ணாவிரதமும் பின்புலமும்

கேரள மாநிலம் கோட்டயத்தில் இயங்கி வரும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த தீபா மோகனன். அவரது ஆராய்ச்சி பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலர் தடங்கல்களை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு அவரை தடுக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டுமெனவும் கூறி கடந்த அக்டோபர் 29 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார்.
அதோடு தனது ஆராய்ச்சி பணிக்காக பல்கலைக்கழகத்தில் உள்ள Resource-களை பயன்படுத்திக் கொள்ளவும் தன்னை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 1-ஆம் தேதியன்று அவரது அனைத்து கோரிக்கைகளையும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அவர் குற்றம் சுமத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பல்கலைக்கழகம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளது. அதனால் போராட்டத்தை தீபா தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து, தீபாவின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து தீர்வு காண்பதாகவும், குற்றம் சுமத்திய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடவும் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தீபா தனது உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை முகநூல் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார் அவர்.
முன்னதாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-இல் M.Phil படிப்பில் சேர்ந்துள்ளார் தீபா. அவரது கூற்றுப்படி கடந்த 2015 வாக்கில் அவர் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர்கள் உட்பட சில அதிகாரிகள் சாதி ரீதியாக தனக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதாகவும், இதனால் தன் முனைவர் பட்டத்தை தன்னால் முடிக்க முடியவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/121362/Kerala-Minister-urges-doctoral-student-Deepa-Mohanan-to-give-up-hunger-strike-and-assure-to-fulfil-student-s-demands.html
Comments
Post a Comment